districts

img

தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியல் சாதி பெண்ணின் உடலை புதைக்க 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி என்ற கிராமத்தில், அமுதா என்ற பட்டியல் சாதி பெண்ணின் உடலை புதைக்க இடமில்லாமல் 3 நாட்கள் போராட்டம் நடந்துள்ளது.

அந்த கிராமத்தில் இருப்பதில் 10 குடும்பங்கள் மட்டுமே பட்டியல் சாதியினர். பொது மயானம் மறுக்கப்படுவதால் ஏரி, குளம், ஓடை போன்ற இடங்களிலேயே புதைக்கவும், எரிக்கவும் வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்தக் கொடுமையை மாற்றிட அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டு தீர்வு ஏற்படாத நிலையில், அமுதா மரணமடைந்துள்ளார். அவருக்கும் சாதி ஆதிக்க சக்திகளால் மயானம் மறுக்கப்பட்டதால்... செத்த உடலோடு போராடும் நிலைக்கு உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

3 நாட்கள் போராட்டத்துக்கு பின் தற்போது உடல் புதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மயானத்திற்கான கோரிக்கை நீடிக்கிறது.

சுதந்திர இந்தியாவில், சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரீக சமூகத்திற்கே வெட்கக்கேடு. அரசாங்கம் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைந்து செயல்பட வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

 

;