districts

கடலூர் முக்கிய செய்திகள்

காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு அமோக விற்பனை
கடலூர், ஜன. 10- கடலூர் அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு சுற்றியுள்ள 50 கிராம மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வர். சந்தைக்கு கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி போன்றவை விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதேபோல் இங்கு கருவாடு விற்பனையும் நடைபெறும். வழக்கம் போல் திங்கட்கிழமை (ஜன. 10) நடைபெற்ற வாரசந்தையில், வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால் பொங்கல் பானை, கரும்பு, பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை காசிமேடு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு கருவாடு கொண்டு வந்து விற்பனை செய்தனரர்.

இதனால் அதிகாலை முதலே வாரச் சந்தைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானை, கரும்பு, காய்கறிகள், மாடுகளை அலங்கரிக்கும் கயிறு, மணி,? கலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கிச் சென்றனர். முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த வாரம் சந்தையில் கருவாடுகளை அதிகமாக பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்கிச் சென்றனர். சுமார் ஒரு கோடி ரூபாய் கருவாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சந்தையில் பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் திரண்டதுடன் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், பலர் முகக்கவசம் அணியாமலும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

புதுவையில் ஜன.30 தர்ணா: வாலிபர் சங்கம் அறிவிப்பு

புதுச்சேரி, ஜன.10- அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி புதுச்சேரியில் ஜனவரி 30ஆம் தேதி தர்ணா போராட்டம் நடத்து வது என்று வாலிபர் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச சிறப்பு மாநாடு தலைவர் ஆனந்த் தலைமையில் முல்லை நகரில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் எஸ்.பாலா மாநாட்டை துவக்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். பிரதேச செயலாளர் ப.சரவணன், பொரு ளாளர் பாஸ்கர் உட்பட பிரதேசம் முழுவதும் இருந்து திரளான வாலிபர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய பிரதேச தலைவராக பாஸ்கர், செயலாளராக ஆனந்த், பொரு ளாளராக சஞ்சய் உள்ளிட்ட 18 பேர் கொண்ட பிரதேச குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் புதுச்சேரியில் புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்கக் கோரியும், அரசு துறைகளில் உள்ள 10,000 காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரியும், மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி  30ஆம் தேதி 10 மையங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கடலூரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

கடலூர், ஜன. 10- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட மசோதா 2021ஐ கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அகில இந்திய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை கடலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆயத்த மாநாடு சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனிவேல் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. இதில் தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் மு.சு.பொன்முடி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வேல்முருகன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் வி.குளோப், தொமுச பேரவை செயலாளர் வீர.ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சில் பொருளாளர் கி.வேல்முருகன், ஐஎன்டியூசி மாவட்ட கவுன்சில் பொருளாளர் ஏ.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;