districts

கடலூரில் நாளை புத்தகக் கண்காட்சி

கடலூர், மார்ச் 1- சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும் என சட்ட மன்றத்தில் முதலமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்டத்தில் முதன் முறையாக 100 அரங்குகள் கொண்ட பிரமாண்ட புத்தகக் கண்காட்சியை வரும் மார்ச் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு  வேளாண், உழவர் நலன் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தமிழ்நாடு அரசுடன் இணைந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறுகிறது. புத்தக்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடை பெறும். இதில் மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் இதர உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இலக்கியவாதிகள், கலை பண்பாட்டுத் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் இசைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மோகன சுந்தரம், சுந்தர ஆவுடையப்பன், ஈரோடு மகேஷ், ராஜாராம், பர்வீன் சுல்தானா, கார்த்திகை செல்வன், சி.கோபிநாத், அறிவுமதி, பாரதி கிருஷ்ணகுமார், நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகின்றனர். சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் ஆகியவை தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;