districts

img

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு பின் முக்கிய முடிவு

கடலூர்,ஜன.18- போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 19ஆம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

இதையடுத்து, பேச்சுவார்த் தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்தது. அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து,  ஜனவரி 9 ஆம் தேதி  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற் சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பொங் கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கல், போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும்  என ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டது.

ஆனால், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன் தொடர்ச்சியாக, போக்கு வரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு கடந்த 5ஆம் தேதியும், 8ஆம் தேதியும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பிறகு, திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, ஜனவரி 9ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றன. மேலும், போக்குவரத்து ஊழி யர்கள் வேலை நிறுத்த போராட்டம்  ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலி கமாக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்த தொழிற்சங்கங்கள், இந்த பேச்சுவார்த்தையில் உடன் பாடு எடுக்கப்படாவிட்டால் மீண்டும்  போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளன.

அதன்படி, போக்குவரத்து தொழி லாளர்களுடன் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (ஜன.19) நடை பெற உள்ள நிலையில், பேச்சுவார்த் தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையான செயல்பாட்டுக்கு வரும். இந்த ஆண்டு  பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு பேருந்துகளில் இந்த ஆண்டு 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்தனர்.தனியார் பேருந்துகளில்  பயணம் செய்யும் மக்கள் அரசுப் பேருந்தை நோக்கி வருகின்றனர்” என்றார்.