districts

img

ராஜபாளையத்தில் குடிநீர் வழங்ககோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் விலக்கில் குடிநீர் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் 6  தெருக்கள் உள்ளன. ஆறு தெருக்களிலும் கடந்த 15 தினங்களாக குடிநீர் வரவில்லை என்பது இப்பகுதி பொது மக்களின் குற்றச்சாட்டு. அருகிலுள்ள தோப்புப்பட்டி தெரு, ஸ்ரீரங்கபாளையம் தெரு போன்ற பகுதிகளுக்கு எட்டு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், இரு வாரங்களாக இந்த ஆறு தெருக்களிலும் குடிநீர் வராததால், பொதுமக்கள் காலி குடங்களுடன் சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்தவுடன் ராஜபாளையம் தெற்கு போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்குவோம் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டம் காரணமாக  சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.