வேலூர், ஏப். 13 - தமிழியக்கம் சார்பில் தனித் தமிழ் பெயர் மாற்றப் போராளி கு.மு.அண்ணல் தங்கோவின் 119ஆவது பிறந்தநாள் விழா விஐடி ராஜாஜி அரங்கில் நடை பெற்றது. விழாவிற்கு தலைமை யேற்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: கு.மு.அண்ணல் தங்கோ தமிழ் மொழிக்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியவர், பாவேந்தர் பாரதிதாசன் அண்ணல் தங்கோ பற்றி கவிதை எழுதி யுள்ளார். அண்ணல் தங்கோ தன்னுடைய 19ஆவது வயதில் மொழிக்காக போராடி சிறை சென்றவர். இந்திய நாட்டில் பல்வேறு முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அவர் எங்கே போனாலும், எது செய்தாலும், பேசினாலும் தமிழ் மொழிக்காகத்தான் இருக்கும். நாம் தமிழில் பெயர் சூட்டுவதற்கான நோக்கம் நாம் தமிழன் என்று அடையாளப்படுத்து வதற்கும், உலகின் மிகப் பெரிய மொழிக்கு நாம் சொந்தக்காரர் என்று காட்டுவதற்கும்தான். உலகில் 7,100 மொழிகள் பேசப்படுகின்றன, அதிகமான மொழிகள் பேசக் கூடிய நாடுகளில் இந்தி யாவும் ஒன்று, இந்தியா வில் 131 பெரிய மொழி கள் பேசப்படு கின்றன. இதில் நம் தமிழ் மொழி உலகின் மூத்த மொழி யாகும். தமிழ்நாட்டு மக்கள் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும், இதன்மூலம் நம் மொழியின் வளத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும், தமிழ் பற்றை அதிகரிக்க வேண்டும். நாம் பல மொழிகளை கற்பதில் எந்த தவறும் இல்லை அதே நேரத்தில் தமிழ் மொழியை பிற மொழி கலக்காமல் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆய்வாளரும், எழுத்தாளருமான திருமா வேலன், புலவர் பதுமனார், கவியருவி அப்துல் காதர் ஆகியோரும் பேசினர். அண்ணல் தங்கோவின் பேரன் அருள்செல்வன், தங்கோவின் தம்பி மகன் சத்தியவேல் முருகனார் நெகிழ்வுரை வழங்கினர். முன்னதாக சுகுமார் வரவேற்றார். புலவர் மோகன்குமார் நன்றி கூறினார்.