திருச்சிராப்பள்ளி, செப்.13 - திருச்சி மாநகராட்சி 49-வது வார்டுக்கு உட்பட்ட முடுக்குபட்டியில் கடந்த பல வருடங்களாக 120-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்நிலையில் அந்த இடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமா னது எனக்கூறி, கடந்த சில நாட் களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் சார்பில் வீட்டை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுக் கப்பட்டது. இதனை கண்டித்தும், பொது மக்களை அப்புறப்படுத்த கூடாது என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் ஞாயிறன்று பொதுமக்கள் அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், திருச்சி ஜங்ஷனில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவ லகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். போராட் டத்திற்கு சிபிஎம் பொன்மலைப் பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மணிமாறன் மற்றும் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க தலைவர் கணேசன், செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க சென்ற வர்களை அனுமதிக்காததால், பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாய் மற்றும் பாத்திரங்களை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் விரித்து, அதில் உட்கார்ந்து காத்திருப்பு போராட்டம் மற்றும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்தப் போராட்டம் குறித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் ராஜா கூறுகை யில், “முடுக்குப்பட்டி இடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே இந்த விஷ யத்தில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எதுவும் கூடாது. 120 குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மையமாக கொண் டது இந்த இடம். அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த கூடாது. வேறு இடம் கொடுத்தாலும் அதனை ஏற்க மாட்டோம். ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் நடை பெறும்” என்றார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரயில்வே கோட்ட மேலாளர், “இந்த இடத்தை தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வோம் என சுற்ற றிக்கை மட்டுமே தற்பொழுது வழங்கப் பட்டுள்ளது. உடனடியாக அங்குள்ள மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார். போராட் டத்தில் முடுக்குப்பட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.