திருச்சிராப்பள்ளி, பிப்.5- தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் புதனன்று திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில், உயர் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து சங்க தலைவர் பாபநாசம் வேலு தலைமையில், துணைத் தலைவர் கடலூர் சாகுல் ஹமீது, செயலாளர் தம்புடு (எ) கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் விழுப்புரம் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல்குவாரி மற்றும் கிடங்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக 12.9.2023 அன்று அமலாக்கத் துறையினர் சோதனையிட்டதால் அனைத்து அரசு மணல்குவாரிகளும், கிடங்குகளும் இயக்கப்படாமல் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மணல் லோடு எடுப்பதற்கு என்று வடிவமைக்கப்பட்ட சுமார் 20,000 க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் இயக்கப்படாமல் வேலை வாய்ப்பை இழந்துள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணல்குவாரி இயங்காததால் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், செயற்கை மணல் எம். சேண்டு மற்றும் பி.சேண்டு உற்பத்தியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக அதிக விலைக்கு விற்கின்றனர். அனைத்து கிரஷர் உரிமையாளர்களும் அவர்களாகவே சொந்தமாக லாரிகளை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கும், அரசு கட்டுமான வேலைகளுக்கும் கொண்டு செல்கின்றனர். இதனால் நாங்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றோம். ஆகவே எங்களது சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் திறக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்று ஒரு சில தினங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வெளியிடாத பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் லாரி உரிமையாளர்களையும் ஒன்றிணைத்து மணல்குவாரி திறக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.