districts

img

போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 27-  15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடித்து முழுமையாக ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய் அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஓய்வு பெற்றோர் நல அமைப்புகள் திருச்சி கரூர் மண்டலம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி மண்டல பொதுச் செயலாளர் சுந்தரராஜ், சம்மேளன துணைத்தலைவர் சுப்ரமணியன், சிஐடியு சம்மேளன துணைத்தலைவர் கருணாநிதி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல துணைத் தலைவர் சீனிவாசன், டி.டி.எஸ்.எப் மண்டல பொதுச் செயலாளர் ஜெபக்குமார், ஏ.ஐ.டி.யு.சி சம்மேளன பொருளாளர் நேரு துரை ஆகியோர் பேசினர். சிஐடியு துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.  

தஞ்சாவூர்  .

தஞ்சாவூர் நகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மத்திய சங்கப் பொருளாளர் எஸ்.ராமசாமி, ஏஐடியுசி மத்திய சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில், மே 29 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை மேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாக பேசி சம்பளம் உயர்வு அறிவிக்க வேண்டும். 1.9.23 முதல் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டும். சிபிஎஸ் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்களை கைவிட்டு தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.  போக்குவரத்து கழகத்தில் 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் கழக ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் தனியார்மய மற்றும் காண்ட்ராக்ட், ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட முப்பதாயிரம் காலிப் பணியிடங்களை நேரடி நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இரண்டு உரிமங்கள் வேண்டும் என்ற நடைமுறைகள் கைவிடப்பட வேண்டும். மினி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளையும் போக்குவரத்து கழகங்களே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், கும்பகோணம் சங்க தலைவர் என்.சேகர், சிஐடியு மத்திய சங்கத் தலைவர் த.காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி நிர்வாகிகள், பொதுச்செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், எம். தமிழ் மன்னன், ஆர்.ரெங்கதுரை, சிஐடியு மத்திய சங்க துணைத் தலைவர் முருகசக்தி, நகர் கிளை நிர்வாகி சித்தார்த்தன், சிஐடியு ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கரந்தை புறநகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு கிளைத் தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளைச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.              அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு காலை 11 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு கிளைத் தலைவர் எஸ். செங்குட்டுவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைச் செயலாளர் பி. வெங்கடேசன், தஞ்சை கிளைச் செயலாளர் ஏ.எஸ். பழனிவேல், ஓய்வு பெற்ற நல அமைப்புச் செயலாளர் எஸ். ஞானசேகரன், அனைத்து ஓய்வுதியர் சங்கத் தலைவர் என். குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.