தஞ்சாவூர், மே 27- தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு மத்திய கூட்டுறவு வங்கியில், தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக, வங்கிக் கடன் கேட்டுச் செல்லும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் போக்கைக் கண்டித்தும், தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கு தடையின்றி கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், பாப்பாநாடு, மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மே 28 ஆம் தேதி (புதன்கிழமை) காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவோணம் ஒன்றியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக மே 26 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை, பாப்பாநாடு மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பொதுமேலாளர் காளைலிங்கம் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கியின் பண்ணை வங்கி கடன் மேலாளர் ரங்கராஜ், பாப்பாநாடு வங்கி மேலாளர் சுமதி ஆகியோரும், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில், மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், திருவோணம் ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா, ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் தங்கப்பன், திருவோணம் ஒன்றிய துணைத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ள தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கடன் வழங்கப்படும் என கூட்டுறவு வங்கி நிர்வாகம் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, மே 28 ஆம் தேதி (புதன்கிழமை)நடைபெறுவதாக இருந்த தொடர் காத்திருப்புப் போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.