districts

img

கூடுதல் பேருந்து இயக்க மக்கள் கோரிக்கை

திருவாரூர், பிப்.5-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி பகுதி அருகே, பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது. இப்பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடவாசலில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என ஆறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மேலும் குடவாசல் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் மஞ்சக்குடி கலை அறிவியல் கல்லூரி என இரு கல்லூரிகள் உள்ளன. குடவாசல் அருகே உள்ள கிராமப்புற மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.  ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரங்களில் அரசு பேருந்து போதுமானதாக இல்லை. ஆகவே பள்ளி கல்லூரிக்கு செல்லும் காலை-மாலை நேரங்களில் அரசுப்பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும். பெரும் விபத்து எதுவும் நடைபெறும் முன்பாக மாணவர்களின் நலன் கருதி, அரசும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.