பெரம்பலூர், ஜன.20 - மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் பெரம்பலூர் கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140-ஐ திரும்ப பெற வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி, பணி காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்துவதால் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகள் 12,349 கிலோ மீட்டர் சாலைகளில் 210-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடி அமைத்து மக்களிடம் சுங்கவரி வசூல் செய்வதை தடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசே நிர்வகித்து பராமரித்திட வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சி.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.