திருவாரூர், மே 27- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக உயர்கல்வித்துறையின் சார்பில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் குத்துவிளக்கேற்றி, வகுப்பறைகளை பார்வையிட்டனர். திங்களன்று மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி.கே. கலைவாணன், க.மாரிமுத்து ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சௌந்தராஜன், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ராஜாராமன், பேரூராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.