மருதுபாண்டியர் கல்லூரியில் தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி
தஞ்சாவூர், பிப்.18- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் உணவக மேலாண்மை துறை (சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் திறன் கவுன்சில்) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் சான்றளித்த திறன் மேம்பாட்டு குறுகிய காலப் பயிற்சியின் ஒரு பகுதியாக, பேக்கரி தொழில் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ், கல்விசார் புலத்தலைவர் மது கிருத்திகா ஆகியோர் பேசினர். பயிற்சியாளர் எஸ். கவிபிரியா, இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். முன்னதாக, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் அ. அனிதா ஞானக்குமாரி வரவேற்றார். ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறைத்தலைவர் கே. ராஜபிரியா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் செய்திருந்தார். இந்த ஆறுமாத கால பயிற்சி மாணவர்களின் திறன் மேம்படவும், தொழில் முனைவோராகவும், பேக்கரி துறையில் வேலை பெறுவதற்கும் பயன்படும். பயிற்சியில் பல்வேறு துறை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
விகடன் இணையதளம் முடக்கம்: பத்திரிகையாளர் நலச் சங்கம் கண்டனம்
கும்பகோணம், பிப்.18- ஆனந்த விகடன் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கி வைத்து உள்ளதற்கு, கும்பகோணம் மாநகர அனைத்து பத்திரிகையாளர் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனந்த விகடன் இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. இது, ஜனநாயகத்தின் ஊடகக் குரலை முடக்கும் செயலாகும். இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடும் அளவிற்கு இணையதளத்தையோ, விநியோகத்தையோ முடக்குவதும், அச்சுறுத்துவதும் கண்டனத்துக்குரியது என்று சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சி.பி.எஸ்.இ அங்கீகாரம் இல்லாததால் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ப்பு
தஞ்சாவூர், பிப்.18– அங்கீகாரம் இல்லாதால், சி.பி.எஸ்.இ தேர்வு எழுத முடியாமல் தவித்த 19 மாணவர்கள், அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் மூலம் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுவிக்காடு பிரைம் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 16 மாணவர்கள், 3 மாணவியர் என 19 பேர் 10ஆம் வகுப்பு படித்து வந்தனர். ஆனால், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கான அங்கீகாரம் இல்லாததால், பொதுத்தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன், கடந்த பிப்.16 ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அப்போது, சமச்சீர் கல்வி மூலம் நடத்தப்படும் மாநிலக் கல்வி வாரியத் தேர்வு எழுதுவதற்கு 19 மாணவர்களுக்கும் சிறப்பு விதிகள் பெற்றுக் கொடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செயலரிடமும் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர், பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்படி, 19 மாணவர்களும் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தில், தேர்வு எழுதும் வகையில், தனி வகுப்பறையை உருவாக்கி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி வி.சாரதி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 44 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் விரைவில் சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்படும். மேலும், பிரைம் பள்ளிக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கிராமப்புற பயிற்சி
தஞ்சாவூர், பிப்.18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம், களத்தூர் கிராமத்தில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு கிராமப்புற பயிற்சி துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். ராணி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அக்ரி சண்முகவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். வேளாண் கல்லூரி மாணவர் சயீத் யாசின் வரவேற்றார். விழாவில், பேராவூரணி வட்டாரத்தில் சாகுபடி செய்து வரும் பயிர்கள், நடப்பில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விவசாயிகள் பயிர் சாகுபடி தொடர்பான தங்களது அனுபவங்களை வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். தற்போது நடைமுறையில் உள்ள வேளாண்மை தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு செயல்முறை அடிப்படையில் செய்து காண்பிக்கப்பட்டது. வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. வேளாண் கல்லூரி மாணவர் ரிஷிகேஷ் நன்றி கூறினார்.
கும்பகோணத்தில் ‘சைபர் கிரைம்’ காவல் நிலையம் திறக்க வேண்டும்: சிபிஎம் கோரிக்கை
கும்பகோணம், பிப்.18- தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் நடைபெறும் இணையதள குற்றங்களை விசாரிக்க சைபர் கிரைம் காவல் நிலையம் திறக்க வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் செந்தில்குமார் தெரிவித்ததாவது: கும்பகோணம் மாநகரம் திருவிடைமருதூர் பகுதிகளில் இணைய தள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வங்கி ஏ.டி.எம். கார்டில் உள்ள எண்களை கேட்டு பணம் திருடும் மோசடியில் தொடங்கி, இணைய வர்த்தகம், என பல்வேறு வழிமுறைகளில் சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது. இவற்றை புகார் செய்ய கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதி மக்கள், தஞ்சாவூர் சைபர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். இதற்காக சுமார் 2 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதனாலேயே பாதிக்கப்பட்ட அதிகம்பேர் புகார் தெரிவிப்பதில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொருத்தவரையில், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் உள்பட 7 காவல் துணைக் கோட்டங்கள் உள்ளன. இந்த 7 துணைக் கோட்டங்களுக்கு, ஒரே ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. புகார் கொடுப்பவர்கள், இணையதள குற்றங்களை விசாரிக்கும் காவலர்கள் வசதிக்காக கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு கும்பகோணம், திருவிடைமருதூர் காவல் துணைக் கோட்டங்களுக்கு இணையதள குற்றங்களை விசாரிக்க, புதியதாக ஒரு காவல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, கும்பகோணம் பகுதியில் இணையதள குற்றங்களை விசாரிக்க காவல் நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கும்பகோணம் மாநகரக் குழு கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
தஞ்சாவூர், பிப்.18- டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் பருவத்தில் மாணவர்கள் சேர்வதற்கான தேர்வு 01.06.2025-ல் நடைபெறவுள்ளது. அதன் விபரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www.rimc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை- 600 003 என்ற முகவரிக்கு மார்ச்.31 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைத்திட வேண்டும். 01.01.2026 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது 02.01.2013-க்கு முன்னதாகவும் 01.07.2014-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் போது, அதாவது 01.01.2026-ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர் சிறார்கள், இக்கல்லூரியில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
பாபநாசம், பிப்.18- பாபநாசத்தில் கும்பகோணம்-தஞ்சாவூர் மெயின் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த மகாமகத்திற்கு முன்னர் போடப்பட்ட இந்தச் சாலை, அதன் பின்னர் பேட்ச் ஒர்க் மட்டுமே கண்டதால் குண்டும், குழியுமாக இருந்தது. தற்போது இந்தச் சாலையை புதிதாக போட்டுள்ளதால், இதன் வழியே செல்லும் தனியார் பேருந்துகள், சில அரசு பேருந்துகள் அதி வேகமாகச் செல்கின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இது குறித்து இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை குறுகலானது. இதில், தனியார் பேருந்துகள் கலெக்ஷனுக்காக அதிவிரைவாகச் செல்கின்றன. அவைகளிடையே போட்டி உள்ளன. தனியார் பேருந்துகளின் போட்டியால் சாலைகளில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமுள்ளது. தனியார் பேருந்துகளின் ஹாரன் சத்தம் காதை செவிடாக்கும் வகையில் ஒலிக்கிறது. தனியார் பேருந்துகள் பயணிகளை திணித்தபடி செல்கின்றன. வேறு வழியின்றி ஏறும் முதியவர்கள், கர்ப்பிணிகள் சிரமப் படுகின்றனர். தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
பிப்.27 இல் இலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
பெரம்பலூர், பிப்.18- பெரம்பலூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் பிப்.27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, அம்மைய தலைவர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர், செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில், வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் பிப்.27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், வெள்ளாடு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022, 9123548890 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பெயர் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கிணற்றில் விழுந்து இறந்த அண்ணன்- தங்கை
புதுக்கோட்டை, பிப்.18- புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே சோதிராயன்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்திரக்குமார்-ஜீவிதா தம்பதியர். இவர்களின் மகன் மணிகண்டன் (18), ஐடிஐ முடித்துவிட்டு எலட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். மகள் பவித்ரா (16) பிளஸ் 1 படித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு வீட்டில் கைப்பேசியை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது பவித்ராவின் கைப்பேசியை அண்ணன் மணிகண்டன் வாங்கி உடைத்துவிட்டதாகவும் தெரிகிறது. இதில் கோபமடைந்த பவித்ரா அருகேயுள்ள விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றும் நோக்கில் கிணற்றில் மணிகண்டனும் கிணற்றில் குதித்துள்ளார். தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு நள்ளிரவில் தேடுதல் பணி நடந்து, இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். உடல்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.