districts

img

பேராவூரணி கிளை நூலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

தஞ்சாவூர், பிப்.5-  பேராவூரணி அரசு கிளை நூலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே தமிழ்நாடு அரசு கிளை நூலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான வாசகர்கள், போட்டித்தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவிகள் தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், நூலகத்திற்கு போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. நூலக வாசகர்கள் அமர்ந்து படிக்க சிரமப்பட்டு வருகின்றனர் என பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக பேராவூரணி கிளை நூலகத்திற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் புதன்கிழமை வருகை தந்தார். அவருடன் கல்விப்புரவலர் அ.அப்துல் மஜீத் உடனிருந்தார். அவரை நூலகர்கள் ஸ்ரீவெங்கட்ரமணி, சித்ரா தற்காலிக பணியாளர் ஈஸ்வரி ஆகியோர் வரவேற்றனர். சட்டமன்ற உறுப்பினரிடம் நூலக ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் இட நெருக்கடி குறித்து தெரிவித்து, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை குறித்து, பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.