மாட்டுக்கறி உண்பதற்கு அனுமதி மறுத்து, அராஜகத்தில் ஈடுபட்ட கரூர் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செப்.17 பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் ஆண்டுதோறும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், மாட்டுக்கறி பிரியாணி உண்பதும், மற்றவர்களுக்கு வழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தாண்டும் ஊர்வலமாக வந்து, லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மாட்டுக்கறி பிரியாணி உண்பதற்கு ஆயத்தமாகினர். அப்பொழுது அங்கு வந்த கரூர் டிஎஸ்பி, இங்கு மாட்டுக்கறி பிரியாணி உண்ணக்கூடாது என தடுத்து நிறுத்தி உள்ளார். ஏன் என்று கேட்டதற்கு, “ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் இதை தடுக்க வேண்டும் என மனு கொடுத்ததாக கூறினார். மேலும், மீறி அனுமதித்தால் நாங்கள் பன்றி கறி வழங்குவோம்” என்று கூறியதாக தெரிவித்து, மாட்டுக்கறி பிரியாணி உண்பதை தடுத்து நிறுத்தி உள்ளார். அவ்வாறு அவர்கள் பன்றிக் கறி கொடுத்தால், உண்பதற்கு நாங்கள் தயார் என்று கூறியும் அதை ஏற்காமல், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களை அராஜகமான முறையில் கைது செய்தனர். கரூர் மாவட்ட காவல்துறை மதவாத, வகுப்புவாத, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணிக்கு துணை போவது வெட்கக் கேடானது. இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் கரூர் டிஎஸ்பி மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.