புதுக்கோட்டை, ஜூலை 11-
நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை அமல் படுத்தக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் மனுக் கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் புதுக்கோட்டை நக ராட்சியையும் இணைத்து வேலையின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கமும் இணைந்து மாபெரும் மனுக் கொடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க் கிழமை நடத்தின.
புதுக்கோட்டை சிறைச்சாலை ரவுண்டானா வில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேரணி யாகச் சென்றனர். போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரத் தலைவர் ஆர்.நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, பொருளாளர் வைகை ராணி, விதொச மாவட்ட துணைச் செயலாளர் கே.சித்திரைவேல் மற்றும் மாதர் சங்க நிர்வாகி கள் பேசினர். மாதர் சங்க நகர் செயலாளர் ஆர். முத்துமாரி நன்றி கூறினார்.
போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்க வேலுவிடம், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத் தில் வேலை கேட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மனுக்கள் கொடுக்கப்பட்டன.