மயிலாடுதுறை, மே 6- முன்பு நீர்நிலைகளாக இருந்து நகர வளர்ச்சி காரணமாக தற்போது வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் இல்லை என்ற நிலையில், அவற்றை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். கோவில் மனைகளில் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருபவர்கள் மற்றும் குடியிருந்து வரும் ஏழை-எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி தலைமுறை, தலைமுறையாக குடியிருந்து வரும் இடத்தை விட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு அவசர சட்டம் இயற்றி ஏழை, எளிய மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு, கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகளை முழங்கியவாறு மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் சார் ஆட்சியர் ராமச்சந்திரனிடம் மனுக்களை அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் பேசினர். பின்னர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர், கொரடாச்சேரி ஒன்றிய-நகரங்களின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், நகர செயலாளர் எம்.தர்மலிங்கம் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் நக்கீரனிடம் 530 மனுக்கள் அளிக்கப்பட்டன. மன்னார்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் தலைமை வகித்தார். கோட்டூர் செயலாளர் என்.சண்முகவேல், மன்னார்குடி செயலாளர் ஏ.பி.தனுஷ்கோடி முன்னிலை வகித்தனர். சிஐடியு தலைவர்கள் ஜி.ரகுபதி, ஜி.முத்துகிருஷ்ணன், டி.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் நேரிடையாக வந்து 312 மனுக்களை பெற்று கொண்டார். நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரேவதி, ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி, நகர செயலாளர் வீ.தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோட்டூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மன்னார்குடி, கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர்கள் கே.ஜெயபால், டி.ஜெயபால், நீடாமங்கலம், கொரடாச்சேரி, மன்னார்குடி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
குடவாசல்
குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி விளக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஆர்.லெட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 325 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. வலங்கைமானில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், ஒன்றிய செயலாளர் என்.ராதா கண்டன உரையாற்றினர். நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 15 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் 375 மனுக்களை வட்டாட்சியரிடம் அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், கே.தமிழ்மணி மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், கதிரேசன், பழனிச்சாமி ஆகியோர் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியக்குழு, மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேராவூரணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் எம்.இந்துமதி தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள் முன்னிலை வகித்தார். திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். பூதலூர் தெற்கு, வடக்கு ஒன்றியங்களின் சார்பில், பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் சி.பாஸ்கர் (தெற்கு), எம்.ரமேஷ் (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
திருவிடைமருதூர்
கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாதர் சங்க பொறுப்பாளர் அறிவுராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாபநாசம்
பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மதுசூதனனிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி, நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.முகமதலிஜின்னா, சி.மாரிக்கண்ணு, அ.மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர் கே.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறந்தாங்கியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலங்குடியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுசீலா, நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆவுடையார்கோவிலில் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். பொன்னமராவதியில் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலுப்பூரில் அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விராலிமலையில் ஒன்றியச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணமேல்குடியில் ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
கட்சியின் நாகை மாவட்ட குழு சார்பில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் என்.அமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக அரியலூர் ராஜீவ் காந்தி நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாநிலத் தலைவரும், மாநிலக் குழு உறுப்பினருமான வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே.மகாராஜன், வி.பரமசிவம், கந்தசாமி, எம்.வெங்கடாச்சலம், கே.கிருஷ்ணன், துரை.அருணன், டி.அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்குமாறு கூறினர். மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே மனுவை கொடுக்க முடியும் என மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா கூறியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் மொத்தம் 642 மனுக்கள் வழங்கப்பட்டன.
கரூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, ஜி.ஜீவனந்தம், பி.ராஜூ, கே.சக்திவேல், சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.