districts

ஆக்கூரில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

மயிலாடுதுறை, டிச.2-  மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 11ம் தேதி  அதீத கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள்  முறையாக தூர்வாரப்படாததால் கரைகள் வழிந்தும், வாய்க்கால்கள் உடைப்பு ஏற்பட்டும் பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டன.  தரங்கம்பாடி வட்டத்தில் தலச்சங்காடு, தலையுடையவர்கோவில் பத்து, கருவி, ஆக்கூர்,  திருக்கடையூர், மாமாகுடி, காலமாநல்லூர், கீழையூர், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியன. ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. ஆக்கூர் ஊராட்சியில் உள்ள உடையார்கோவில்பத்து, கீழத்தெரு, தெற்கு தெரு மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடானது. வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்நிலையில், ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முருகன் முயற்சியால் ஆக்கூர் ஊராட்சி சார்பில்  காவிரி ஆறு, அம்மனாறு மூலம் 125 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெற்று வரும் திருவரங்கன்னி வாய்க்கால், ஆக்கூரான் வடிவாய்க்கால், கருவேலி வாய்க்கால், வண்ணான் வாய்க்கால், ஓடை வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.