districts

img

சத்தியவாணன் பாசன வாய்க்காலில் திறந்து விடப்படும் பாதாளச் சாக்கடை கழிவுநீர்

மயிலாடுதுறை, பிப்.5-   மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்தை பாழாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக முக்கிய பாசன வாய்க்காலான சத்தியவாணன் வாய்க்காலில் மயிலாடுதுறை நகராட்சியின் ஒட்டுமொத்த பாதாள கழிவுகள் திறந்துவிடப்படுவதை கண்டித்து செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மக்கள் மசோதா கட்சி சார்பில், அக்கட்சியின் மாநில தலைவரும், சமூக சேவகருமான மாயா வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மன்னப்பந்தல், பெருவெளி, ஆறுபாதி, பரசலூர், செம்பனார்கோவில், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், கிடங்கல், காலமநல்லூர், மருதம்பள்ளம், சின்னங்குடி உள்ளிட்ட கிராமங்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வாய்க்காலாக உள்ளது சத்தியவாணன் வாய்க்கால். மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக அமைக்கப்படாததால் கழிவு நீரை சுத்திகரிக்காமல் இந்த வாய்காலில் திறந்து விடப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசி வாய்க்காலில் சாக்கடை ஆறு போன்று ஓடுகிறது.  மேலும், வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்ககோரி 15 ஆண்டுகளாக  பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும், போராட்டங்களை நடத்தியும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவி்லை. இந்நிலையில் இப்போராட்டம் நடைபெற்றது. இதே நிலை நீடித்தால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு, நிலத்தடி நீரின் தன்மை மாறுபடும் எனவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.