திருச்சிராப்பள்ளி, மார்ச் 4 - திருச்சி மாநகராட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதி நடைபெற்று, கடந்த பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர்கள் கடந்த மார்ச் 2 ஆம் தேதி பதவி ஏற்றனர். இந்நிலையில் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இதில் திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மேயர் பதவிக்கான வேட்புமனுவை திமுக கவுன்சிலர் மு.அன்பழகன் மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமானிடம் வழங்கினார். வேறுயாரும் போட்டியிட முன்வராததால் அன்பழகன் திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் பதவி ஏற்றுக்கொண்டார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து துணைமேயர் பதவிக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் திவ்யா தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் திவ்யா துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் வெள்ளியன்று நடந்தது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலகமான நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் காலை தலைவருக்கான மறைமுகத்தேர்தலும், மதியம் துணை தலைவருக்கான மறைமுகத் தேர்தலும் நடைபெற்றன. பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் சுயேட்சையும், ஒரு இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெற்றி பெற்று உள்ளது. இதில் அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள திமுக, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில் 11 ஆவது வார்டு கவுன்சிலர் அம்பிகா பெரம்பலூர் நகராட்சி தலைவராகவும், 20 ஆவது வார்டு கவுன்சிலர் ஹரிபாஸ்கர் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். குரும்பலூர் பேரூராட்சி 11 ஆவது வார்டு கவுன்சிலர் சங்கீதா குரும்பலூர் பேரூராட்சி தலைவராகவும், 9 ஆவது வார்டு கவுன்சிலர் கீதா துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல் அரும்பாவூர் பேரூராட்சி தலைவராக வள்ளியம்மையும், துணை தலைவராக சரண்யாவும், பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக பாக்கியலட்சுமியும், துணை தலைவராக செல்வலட்சுமியும், லெப்பைகுடிக்காடு பேரூராட்சி தலைவராக ஜாஹிர் உசேனும் லெப்பைக்குடிகாடு துணை தலைவராக ரசூல் அகமது தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். பெரம்பலூர் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பிகா, ஹரிபாஸ்கர் ஆகியோருக்கு நகராட்சி ஆணையர் குமரிமன்னன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் நான்கு பேரூராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். பெரம்பலூர் நகராட்சியில் நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்ற அனைவரும் பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகம் சென்று முன்னாள் மத்திய அமைச்சரும் துணை பொது செயலாளருமாகிய ஆ.ராசாவிடம் வாழ்த்து பெற்றனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 24, காங்கிரஸ் ஒன்று, மதிமுக ஒன்று, அதிமுக 7 பாமக 2 ஆகிய இடங்களை கைப்பற்றின. இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது உறுதியானது. அதே சமயம் தலைவருக்கான பதவிக்கு திமுகவில் இருதரப்பினர் முனைப்பு காட்டியதால் கடும் போட்டி நிலவியது. திமுக சார்பில் மயிலாடுதுறை திமுக நகர செயலாளராக உள்ள குண்டாமணி என்கிற செல்வராஜ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வெள்ளியன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் முடிவில் மொத்தமுள்ள 35 வாக்குகளில் 18 வாக்குகளை குண்டாமணி செல்வராஜ் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லிங்கராஜனுக்கு அதிமுக உறுப்பினர்கள் அளித்த வாக்குகளையும் சேர்த்து 16 வாக்குகள் கிடைத்தன. ஒரு செல்லாத வாக்கு பதிவானது. இதையடுத்து தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லிங்கராஜனைவிட 2 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பதவியேற்றுக் கொண்ட அவருக்கு மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் மற்றும் திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த சண்.ராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக கூட்டணி 40 வார்டுகளிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேட்சைகள் இரு இடங்களிலும், பாஜக, அமமுக தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து மாநகராட்சின் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை திமுக சார்பில் 45 ஆவது வார்டு உறுப்பினர் சண்.ராமநாதன் தனது வேட்பு மனுவை ஆணையர் க.சரவணக்குமாரிடம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் 41 -ஆவது வார்டு உறுப்பினர் மணிகண்டனும் மேயருக்கு போட்டியிடுவதாக வேட்புமனுவை வழங்கினார். போட்டி இருந்ததால் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சண்.ராமநாதன் 39 வாக்குகளும், அதிமுகவின் மணிகண்டன் 11 வாக்குகளும் பெற்றனர். அமமுக சார்பில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் மேயர் தேர்தல் கூட்டத்துக்கு வரவில்லை. இதையடுத்து 39 வாக்குகள் பெற்ற சண்.ராமநாதனை மேயராக ஆணையர் அறிவித்து, அதற்கான சான்றிதழை வழங்கினார். இதையடுத்து மீண்டும் பகல் 12.20 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாமன்ற கூட்ட அரங்குக்கு வந்தார். அப்போது மேயராக தேர்வு செய்யப்பட்ட சண்.ராமநாதனுக்கு, மேயருக்கான 108 பவுனால் ஆன தங்கச் சங்கிலியை அணிவித்தார். தொடர்ந்து ஆணையர் வெள்ளி செங்கோலை மேயரிடம் வழங்கினார். அப்போது எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் கும்பகோணம் மாநகராட்சியின் அலுவலக கூட்ட அரங்கில் முதல் மேயர் தேர்தல் நடைபெற்றது. அதில் கும்பகோணம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் உட்பட திமுக கூட்டணி 45, அதிமுக 3 என 48 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கும்பகோணம் மாநகராட்சி 17 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ தொழிலாளி சரவணனை மேயர் வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்தது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பொறுப்பிற்கு யாரும் போட்டியிடாததால் மாமன்ற மேயர் பதவிக்கு, போட்டியின்றி சரவணன் தேர்வு செய்யப்பட்டு, கும்பகோணம் மாமன்ற மேயராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து துணை மேயருக்கான தேர்வு நடைபெற்றது. அதில் திமுகவைச் சேர்ந்த 26 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சுப.தமிழழகன் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கும்பகோணம் மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய மேயர் மற்றும் துணை மேயரை மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், முறைப்படி புதிய மேயர் சரவணனிடம் வெள்ளி செங்கோல் கொடுத்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கும்பகோணத்தில் முதன் முறையாக நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆட்டோ தொழிலாளி ஒருவர் மேயராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் திமுகவும், ஒரு பேரூராட்சியில் அதிமுகவும் தலைவர் பதவி கைப்பற்றியது. புதுக்கோட்டை நகராட்சித் தலைவராக திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில்குமாரின் மனைவி திலகவதியும், அறந்தாங்கி திமுக நகரச் செயலாளர் ரா.ஆனந்தும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோன்று, பேரூராட்சிகளில் ஆலங்குடியில் மு.ராசி, கீரமங்கலத்தில் சி.சிவக்குமார், அரிமளத்தில் மு.மாரிக்கண்ணு, பொன்னமராவதியில் சுந்தரி அழகப்பன், கீரனூரில் ஜெயமீரா, கறம்பக்குடியில் உ.முருகேசன், இலுப்பூரில் சகுந்தலா ஆகிய திமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அன்னவாசலில் அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்கள் நகராட்சிகளில் புதுக்கோட்டை லியாகத்அலி, அறந்தாங்கி முத்து என்ற சுப்பிரமணியன், பேரூராட்சிகளில் ஆலங்குடியில் பி.ராஜேஸ்வரி, கறம்பக்குடியில் நைனாமுகமது, அரிமளம் வி.கருப்பாயி, பொன்னமராவதியில் கே.புவனேஸ்வரி, கீரனூரில் முகமது இம்தியாஸ், கீரமங்கலத்தில் எஸ்.வி.தமிழ்செல்வன், இலுப்பூரில் எ.செந்தில்ராஜா ஆகிய திமுகவினரும், அன்னவாசலில் அதிமுகவைச் சேர்ந்த திவ்யா கமலநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.