districts

img

எண்ணெய் பனை நடவு விழா: ஆட்சியர், எம்எல்ஏ., பங்கேற்பு

புதுக்கோட்டை, நவ.6 - புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் இணைந்து நடத்தும், மாபெரும் எண்ணெய் பனை நடவு விழாவில், பனை கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டாரங்களில் சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் பனை சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பாமாயில் பழக் குலைகளுக்கு ஒன்றிய, மாநில அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை டன் ஒன்றிற்கு ரூ.15,293 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு 20 ஹெக்டர் பரப்பு விரிவாக்கம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது” என்றார். கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை, தலைமை சந்தை நிர்வாக மேலாளர் (கோத்ரேஜ்) என்.முத்துசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.