districts

திருச்சி காந்தி மார்க்கெட்டில் அடிப்படை வசதி கோரி போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 15-   திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார்மேடு, மீன் மார்க்கெட்டை சுற்றியுள்ள குண்டும் குழியுமான சாலையால் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதை தடுக்க உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும். மின் விளக்குகள் எரியாததால் மார்க்கெட் இருண்டு கிடக்கிறது. பழுதடைந்த மின்விளக்குகளை உடனே மாற்ற வேண்டும்.  தொழிலாளர்களும், பொதுமக்களும் பயன்படுத்தும் பொதுக் கழிப்பறையில் நடக்கும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதனன்று காந்தி மார்க்கெட்டில் இருந்து சுமைப்பணி தொழிலாளர்கள் பேரணியாக சென்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இதையொட்டி மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், தர்பார்மேடு, மீன் மார்க்கெட்டை சுற்றி குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைத்து, ஒரு மாதத்தில் தார்ச்சாலை அமைக்கப்படும். இரண்டு நாட்களுக்குள் மின் கம்பங்கள் மற்றும் விளக்குகள் சரி செய்யப்படும். பொதுக் கழிப்பிடங்களில் சுமைப்பணி தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என உறுதியளித்தனர். இதையடுத்து பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை விளக்க கூட்டத்திற்கு, சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார். பேச்சுவார்த்தையை விளக்கி சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். சுமைப்பணி சங்க மாவட்ட நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.