மயிலாடுதுறை, ஏப்.20 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா புதனன்று நடைபெற்றது. விலங்கியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையே பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட பாரம்பரிய உணவு திருவிழாவை, விலங்கியல் துறையின் முன்னாள் மாணவரும் புதுச்சேரி மாநிலம், நிரவி திருபட்டினம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான எம்.நாகதியாகராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜீன் ஜார்ஜ் முன்னிலை வகித்தார். திருவிழாவிற்கு வந்திருந்தவர்களை துறையின் தலைவர் கிறிஸ்டி பொன்னி வரவேற்றும் படைப்புகளின் சிறப்புகள் பற்றியும் பேசினார். நவதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்தனர். அதோடு உணவு வகைகளின் முக்கியத்துவத்தையும் காட்சிப்படுத்தி இருந்தனர். கண்காட்சியில் கொழுக்கட்டை, பழைய சோறு, மாட்டுக்கறி பிரியாணி, கேப்பக்கூழ், கேழ்வரகு கூழ், கருவாட்டுக்குழம்பு, சீரக சம்பா பிரியாணி, மூலிகை சூப் வகைகள் என ஒவ்வொரு தயாரிப்பு வகைகளும் மாணவர்கள், பேராசிரியர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தன.