திருவாரூர், மார்ச் 8 - திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடி ஊராட்சி, பவித்திரமாணிக்கத்தில் உள்ள அரசு கிளை நூலகத்தில் தன்னார்வலராக பணிபுரியும் முதியவர் இரா.அரிதாசு (73) தனது தனித்தமிழ் பேச்சு மற்றும் உரையாடலால் இப்பகுதியின் புதிய அடையாளமாக பரிணமித்திருக்கிறார். கங்கைகொண்ட சோழபுரம் உட்கோட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இரவுக் காவலராக தனது பணியை 1965 ஆம் ஆண்டு தொடங்கிய இரா.அரிதாசு (73) 2008 ஆம் ஆண்டு தனது பணியை திருவாரூர் மாவட்டத்தில் நிறைவு செய்தார். இரவு காவலராக பணி செய்தபோது, தொடர் முயற்சியால் அலுவலக உதவியாளராக பணி உயர்வு பெற்றார். தலைமை ஆசிரியர் அரங்கநாதன் அளித்த ஊக்கத்தால் ஆங்கிலம் கலவாமல் தமிழ் மொழியில் பேச துவங்கினார். பிறகு தனித்தமிழ் ஆர்வலராக பரிணமித்து தனித்த தமிழ் சொற்களை பயன்படுத்தி பேசுவதோடு, மற்றவர்களோடு உரையாடும் போதும் தூய தமிழில் பேசுகிறார். இவரது இந்த அணுகுமுறையால் தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என நட்பு வட்டம் பெரிதாகி வருகிறது. பணி நிறைவு பெற்ற பிறகு பவித்திரமாணிக்கம் கடைவீதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தில் தன்னார்வலராக தன்னை இணைத்துக் கொண்டு நூலக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். புத்தகங்களுக்கு மத்தியில் தனது வாழ்க்கையை தமிழோடு கலந்து மகிழ்ச்சியாக்கிக் கொண்டிருக்கிறார்.
அவரிடம் பேசியபோது, அவரது சொந்த ஊர் குறித்துக் கேட்டோம். “எனது பிறப்பிய ஊர் (பிறந்த ஊர்) தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் மேல அத்தியூர் என்றார். நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு வருபவர்களிடம் அவர் பேசும்போது சற்று குழம்பித்தான் போகின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதற்கு முதற்கட்டமாக வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் எழுதுவதற்கு முன்னுரிமை கொடுப்பதை சட்டமாக்க வேண்டும். தமிழில் கையெழுத்திடுவதையும், தமிழில் பேசுவதையும் பெருமையாக கருத வேண்டும். அதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டுமென்று பள்ளி இறுதி வகுப்பைக்கூட தொடாத இவர் மிகுந்த ஆர்வத்துடன் கூறுகிறார். இவரது தமிழ் பற்று மற்றும் பணியின் காரணமாக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். கும்பகோணம் நகர தமிழ்ச்சங்கம், புதுவை தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகள் ‘செந்தமிழ் செல்வர்’, ‘தனித்தமிழ் கொற்றவன்’ போன்ற பட்டங்களை வழங்கி பெருமை அளித்துள்ளன. 11.3.2020 அன்றைய தமிழக அரசு கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழத்தில் தரமணி சொற்பிறப்பியல் இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான தமிழ் பற்றாளர் விருதை வழங்கி சிறப்பித்தது. தற்போது இவர் மனைவி மற்றும் மகனோடு வசித்து வருகிறார். தன்னார்வலராக பணிபுரியும் இவருக்கு உள்ளாட்சிமன்ற தலைவர் மற்றும் சிலர் தங்களது சொந்த பொறுப்பில் சொற்ப ஊதியம் வழங்குவதாக கூறியுள்ளனர்.
இவர் பராமரித்து வரும் நூலக்கத்திற்கு இயக்குனர் அலுவலகத்தில் இருந்து முறையான அனுமதி ஆணை இன்னமும் வழங்கப்படவில்லை. தமிழக அரசு அதற்கான உத்தரவை விரைந்து வழங்குவதோடு, நூல்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பற்றாளன் இரா.அரிதாசு, தனது அரசு பணிக்கு குறைந்த அளவில் ஓய்வூதியம் பெற்று வருகிறார். எனவே தமிழக முதல்வர், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து குடும்ப நல பாதுகாப்பு நிதி வழங்கி அவரது தமிழ்த்தொண்டிற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நூலத்திற்கு அனுமதி மாவட்ட மைய நூலகர், தமிழ் ஆர்வலர்கள், நூலக வாசகர்கள் ஆகியோரின் தொடர் முயற்சியால் தற்போது இந்த நூலகத்திற்கு பகுதி நேர நூலகமாக செயல்பட நூலகத்துறை இயக்குநரின் முறையான அனுமதி கிடைத்துள்ளது. இந்த செய்தி இப்பகுதி மக்கள், வாசகர்கள், மாணவ-மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - எஸ்.நவமணி