திருவாரூர், டிச.29- சாரநத்தம், பூனாயிருப்பு ஊராட்சியில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலங்குடி கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலிய பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன் ஆகியோர் விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். போராட்டத்தில், வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள கொக்கலாடி செல்லும் சாலையில் உள்ள சார்வாய்க்கால் வடிகால் பாலத்திற்கு புதிய பாலம் கட்டவேண்டும், சாரநத்தம் மயானத்திற்கு செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்பு சுவர் கட்டவேண்டும், பூனாறுப்பு ஊராட்சி மூன்று குழாயிலிருந்து தெற்கே செல்லும் மண்சாலையை யும், மாணிக்கமங்கலம் உள்ள சிவபுரி- கல்விக்குடி வரும் சாலையை இணைத்து இணைப்பு சாலையை யும் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பேச்சுவார்த்தை
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன், நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் சிபிஎம் தலை வர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். இதை யடுத்து தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், இரண்டு ஊராட்சி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.