districts

img

கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை விவசாயிகள் எதிர்ப்பு

திருவண்ணாமலை, ஜூன் 14- திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள ஒரு தனியார் உரக் கடையில் விவசாயிகள் யூரியா வாங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதை கண்டித்து,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியச் செயலாளர் ரஜினி ஏழுமலை தலைமையில் விவசாயிகள் தனியார் உரக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக கடும் யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது இது குறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்திலும், இது தொடர்பாக விவ சாயிகள் கேள்வி எழுப்பும்போது மாவட்ட ஆட்சியர் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெயரளவுக்கு கூறி வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள மாருதி டிரேடர்ஸ் நிறுவனத்தில் யூரியா வாங்கிய விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து விவசாயிகள் கடையின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் உர நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.