திருவள்ளூர், ஜன.11- திருத்தணியில் 20 குடும்பங்களின் பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருத்தணி அருகில் உள்ள களாம் பாக்கம் ஊராட்சியில் 30 இருளர் இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றில் 20 குடும்பங்களுக்கு மட்டும் அதே இடத்தில் 1999 ஆண்டு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாக்களை இதுவரை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யவில்லை.மீதமுள்ள 10 குடும்பங்களுக்கு 2021 ம் ஆண்டு மாற்று இடத்தில் பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கும் இதுவரை பட்டா கொடுக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டவில்லை. மேலும் கிராம கணக்கிலும் பட்டாவை பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் அம்மக்களுக்கு அரசின் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில் பட்டா கொடுத்த இடத்தை திங்களன்று (ஜன 9) தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.பின்னர் இருளர் இன மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கல் நட வேண்டும். அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என திருத்தணி வட்டாட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.