districts

திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை ஒரே வார்டில் ஒருங்கிணைக்க கோரிக்கை

திருப்பூர், ஜன.12- திருப்பூர் கரட்டாங்காடு பகுதியை ஒரே வார்டில் ஒருங்கிணைக்க அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி தாராபுரம் சாலை 42-ஆவது வார்டுக்குட்பட்ட கரட்டாங்காடு பகுதி பொதுமக்கள், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  எங்கள் பகுதியில் உள்ள 6 வீதிகள், தில்லை நகர், எம்.ஆர்.நகர், என்.பி. காலனி, தனலட்சுமி லே-அவுட், ராயப்பா லே-அவுட், எஸ்.கே.என். லே-அவுட், தாராபுரம் பிரதான சாலை ஆகிய பகுதிகள் இணைந்த பகுதிகளாகும். இவை அனைத்தும் மாநகரின் 3-வது மண்டலத்துக்கு உட்பட்டவையாகும். இந்த பகுதியில் மொத்த வாக்காளர்கள் 8400 பேர் உள்ள னர்.  தற்போது வார்டு சீரமைப்பின்  படி, வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் கரட்டாங்காட்டில் உள்ள 6 வீதிக ளில், 1 முதல் 3 வீதிகள் புதுக்காட்டை 50-வது வார்டு பகுதி யிலும், 4 முதல் 6 வீதிகள் 56 வது வார்டு செரங்காடு பகுதி யிலும், தாராபுரம் பிரதான சாலை 51-வது வார்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே கரட்டாங்காட்டில் உள்ள 6 வீதிகளுக்கு 3 கவுன்சிலர்கள் வருவதால், வார்டுகளில் அடிப்படை வசதிக்கான குடிநீர், சாக்கடை, குப்பை, தெருவிளக்கு போன்ற பணிகளில் இடையூறுகள் ஏற்படும். வார்டு பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களின் மத்தியில் பிரச்சினைகள் உருவாகும். எனவே மேற்கண்ட பகுதிகளை ஒரே வார்டில் ஒருங்கிணைக்க வேண்டும் என கோரியுள்ளனர்.