districts

புத்தகத் திருவிழா இலக்கிய திறனாய்வு போட்டிகள்! 10 ஆயிரம் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாணவர்களுக்கான கலை, இலக்கிய திறனாய்வுப் போட்டியில் பத்தாயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடத்துகின்றனர்.

2025 ஜனவரி 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை 11 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

வழக்கமாக இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாணவ, மாணவியருக்கான கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது.

அதுபோல் 21 ஆவது புத்தகத் திருவிழாவிற்கு திருப்பூர் மாவட்டத்தில் 29 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை மாணவ, மாணவியர் கலை, இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன்படி திருப்பூர் வடக்கு பகுதியில் குமார் நகர், என்.ஆர்.கே. புரம், நெசவாளர் காலனி, வாவிபாளையம், மாஸ்கோ நகர், 15 வேலம்பாளையம், பாண்டியன் நகர், பெருமாநல்லூர் ஆகிய எட்டு மையங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும், திருப்பூர் தெற்கு பகுதியில் ஜெய்வாபாய், நொய்யல் வீதி, வீரபாண்டி, இடுவம்பாளையம், மங்களம், நல்லூர், கே.செட்டிபாளையம், பெரிச்சிபாளையம் ஆகிய எட்டு மையங்களின் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளிலும் என மொத்தம் 16 மையங்களில் இந்த கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இத்துடன் அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, குன்னத்தூர், பொங்கலூர், தாராபுரம், குண்டடம், மூலனூர், காங்கேயம், வெள்ளகோவில், உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி, மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தின் இதர 13 மையங்களிலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

மொத்தம் உள்ள இந்த 29 மையங்களிலும் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓவியங்கள் வரைந்தும், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதினர்.

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் புத்தக திருவிழா வரவேற்பு குழு நிர்வாகிகள் பங்கேற்று இந்த போட்டிகளைத் தொடக்கி வைத்தனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், புத்தகத் திருவிழா வரவேற்பு குழு தொண்டர்கள் அனைத்து மையங்களிலும் இந்த போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.

29 மையங்களிலும் மொத்தம் 10 ஆயிரம் பேர் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோர் தேர்வு செய்யப்பட்டு புத்தகத் திருவிழாவின் போது அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று வரவேற்பு குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் புத்தக சேமிப்புக்கு உண்டியல் வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு 50 ஆயிரம் உண்டியல்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டு பல்வேறு பகுதிகளில் உண்டியல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த உண்டியல்களில் சேமித்து வைக்கும் தொகைக்கு புத்தகத் திருவிழாவின் போது தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் உண்டியல்கள் வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த பிளாஸ்டிக் உண்டியல்களை பயன்படுத்தி முடித்த பிறகு அவற்றை சேகரித்து மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் சூழல் பாதிப்பு இல்லாமல் அழிப்பதற்கும் புத்தகத் திருவிழா வரவேற்பு குழுவினர் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.