போலி ஆவணம் தயாரித்து ,இலவச மின்சாரம் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது .உதவி பொறியாளர் முதல் கண்காணிப்பு பொறியாளர் வரை முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒரு விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள இலவச மின்சார இணைப்பை துண்டிக்காமல் ,அடுத்த கோட்டத்தில் உள்ள நபரில் பெயருக்கு மாறுதல் செய்து ,அதே மின் இணைப்பு எண்ணில் வேறு நபருக்கு பணம் பெற்றுக்கொண்டு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது .
ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த ஜி.உசிலம்பட்டி -ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ராமகிருஷ்ணன் தலைமையில் திங்களன்று மனு அளிக்க வந்திருந்தனர் .அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த மனு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
தலைமுறை தலைமுறையாக மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வந்த இவர்கள் தோட்டத்தில் கடந்த வாரம் வந்த மின்வாரிய அதிகாரிகள் ,உங்கள் மின் இணைப்பு வடிவேல் என்பவரின் பெயரில் உள்ளது .உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதே ,எப்படி மின்சாரத்தை பயன்படுத்தலாம் என கூறி மின் இணைப்பை துண்டிக்க வந்துள்ளனர்.
அப்போது நான் யாருக்கும் நிலத்தையோ ,மின் இணைப்பையோ விற்பனை செய்யவில்லை. எப்படி பெயர் மாறியது தெரியவில்லை என அவர் கூறியுள்ளார் .இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் விசாரித்த போது 30 க்கும் மேற்பட்ட இலவச மின் இணைப்புகளை கோட்டம் விட்டு கோட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .
சிக்கும் அதிகாரிகள்
மின் இணைப்பிற்கு பெயர் மாற்றம் வரும் போது ஆவணத்தை சரி செய்வதோடு, சம்பந்தப்பட்ட இடத்தை உதவி பொறியாளர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அது போல மின் இணைப்பு இடமாற்றம் செய்யும் போது ,சம்பந்தப்பட்ட மின் இணைப்பை துண்டித்து , வயர்களை அலுவலகத்திற்கு எடுத்து வந்து, பின் உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்யவேண்டும் . பின் உதவி செயற்பொறியாளர் செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்த பின் இடமாற்றம் நடைபெறும். அதுவும் ஒரே கோட்டமாக இருந்தால் மட்டுமே எனினும் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது
கோட்டம் விட்டு கோட்டம் மாறுதல் என்றால் கண்காணிப்பு பொறியாளர் இடத்தை ஆய்வு செய்து மின் இணைப்பை இட மாறுதல் செய்யலாம் .
முறைகேடு
ராமலிங்கபுரத்தை சேர்ந்த பொம்மக்காள் என்பவரின் சர்வீஸ் எண் 38 உள்ள மின் இணைப்பு சின்னமனூரை சேர்ந்த வனராஜ் என்பவர் பெயரிலும் , தங்கமுத்து என்பவருக்கு சொந்தமான சர்வீஸ் எண் கம்பத்தை சேர்ந்த சாமுண்டி கவுண்டர் பெயரிலும் , ராமலிங்கம் என்பவரின் சர்வீஸ் எண் பாளையம் ஸ்ரீதரன் என்பவரின் பெயரிலும் , சீனித்தாய் என்பவரின் சர்வீஸ் எண் 51 பாளையத்தை சேர்ந்த செல்லமணி என்பவரின் பெயரிலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
இந்த பகுதியில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட இணைப்புகள் அவர்களுக்கு தெரியாமல், அவர்களின் மின் இணைப்பை துண்டிக்காமல் அறிவியல் பூர்வமாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்கல் முறைப்படி மின் இணைப்பு பெற விண்ணப்பம் மட்டும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை தேனி மாவட்டத்தில் விற்பனையானது.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள இலவச மின்சார திட்டத்தில் ஒரு இணைப்பிற்கு ரூ 1 லட்சம் முதல் ரூ 2 லட்சம் வரை பெற்று வருகிறார்கள்.
மோசடியாக நிலத்தையும், மின் இணைப்பையும் போலி ஆவணம் மூலம் பத்திர பதிவு செய்து, பெயர் மாற்றம் செய்து, கோட்டம் விட்டு கோட்டம் மின் இணைப்பு கொடுத்து எத்தனை லட்சம் ரூபாய் வாங்கியிருப்பார் என்பது உயர் மட்ட அளவில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் தெளிவாக தெரியும்.அதுவும் இலவச மின்சாரம் பெறும் பயனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் ,தனக்கு ஊதியம் தரும் மின் வாரியத்திற்கு கடுமையான பாதிப்பை மின் வாரிய பொறியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர் .அதுவும் பெரியகுளம் கோட்டத்தை சேர்ந்த ஆண்டிபட்டி வட்டம் ஜி.உசிலம்பட்டி -ராமலிங்காபுரத்தை சேர்ந்த இலவச மின் இணைப்பை ,சின்னமனூர் கோட்டத்தை சேர்ந்த கம்பம், பாளையம் ,சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது .இந்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது மாவட்ட அளவில் உள்ள அதிகாரியான மின் வாரிய கண்காணிப்பு பொறியாளருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை .
இது தொடர்பான முழு விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் பெரியகுளம் ,தேனி, சின்னமனூர் ஆகிய கோட்டங்களில் பெயர் மாற்றம், மின் இணைப்பு இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் .