குடவாசல், மார்ச் 20 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திருவாரூர் மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதிய இளைஞர்கள் தேர்வு எழுதி பல மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவு தெரியாமல் மன உளைச்சலில் உள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த 21-10-2021 முதல் 05-11-2021 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் வகையில் பருவகால பட்டியல் எழுத்தர் 72 பேர், பருவகால உதவுபவர் 67 பேர், பருவகால காவலர் 297 பேர் என மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிகளுக்கு மண்டல மேலாளர் அலுவலகத்தில் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டு குறித்த நாளில் தேர்வுகள் நடைபெற்றன. தமிழகத்தில் பொறுப்பேற்ற சில மாதங்களிலேய நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து பல்வேறு பணிக்கான அறிவிப்பு வந்தது. இதையடுத்து, குறைந்தபட்ச ஊதியமாக இருந்தாலும் அரசு வேலை நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிக உற்சாகத்துடன், திருவாரூர் மாவட்ட சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் படிப்புக்கு ஏற்ற வகையில், பதிவு செய்து தேர்வு எழுதினர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பருவம் முடியும் தருவாயில், தேர்வு எழுதி 4 மாதங்களாகியும், தேர்வு முடிவும் தெரியாமல், வேலைக்கான உத்தரவும் இன்றி மனக்குழப்பம் அடைந்துள்ளனர். எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்வு பட்டியலை வெளியிட்டு, அவர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில் உடனே பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.