தஞ்சாவூர், அக்.1- 15 வயது சிறுமியை தாயாக்கிய உறவினருக்கு 25 ஆண்டும், பாலியல் தொல்லை அளித்த காதலனுக்கு 20 ஆண்டும் சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் மணிகண்டன் (26). இவர் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மணிகண்டன் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் சிறுமியுடன் மணிகண்டன் இருப்பதை, சிறுமியின் உறவினரான நாடிமுத்து (42) பார்த்துள்ளார். இதையடுத்து நாடிமுத்துவும் சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சிறுமி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நாடிமுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. மேலும் சிறுமியை காதலித்த மணிகண்டன் அடிக்கடி பாலியல் தொல்லை அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து, சிறுமியின் உறவினர் நாடிமுத்துக்கு 25 ஆண்டுகள் சிறையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், காதலன் மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.