தஞ்சாவூர், மார்ச் 9 - தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இர்வின் பாலத்தை, சாலை விரிவாக்கப் பணிக்காக இடித்து அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் கல்லணைக் கால்வாய் (புதுஆறு) செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே 1929 ஆம் ஆண்டு பாலம் அமைக்கப்பட்டது. அப்போதைய ஆங்கிலேய கவர்னர் ஜென்ட்ரல் லார்ட் இர்வின் தஞ்சாவூர் வந்தபோது, இந்த பாலத்தை திறந்து வைத்ததால், இந்த பாலத்துக்கு இர்வின் பாலம் என பெயர் சூட்டப்பட்டது. 93 ஆண்டுகளை கடந்த இந்த பாலத்தின் வழியாக பெரம்பலூர் - மானாமதுரை மாநில சாலை செல்கிறது. இந்த சாலையை விரிவாக்கம் செய்யவும், பாலத்தினை இருவழிப் பாதையாக மாற்றவும் நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இந்தப் பாலத்தை அகற்றிவிட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் 37 மீட்டர் நீளத்தில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இர்வின் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் புதன்கிழமை முதல் காந்திஜி சாலையில் அண்ணா சிலையிலிருந்து இர்வின் பாலம் வரை மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் பழைய நீதிமன்ற சாலை, பெரியகோயில் சாலை, சோழன் சிலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பாலப் பணிகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.