தஞ்சாவூர், நவ.26- தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித்துறையில் வசுமதி பாரதி-நாவலர் சோமசுந்தர பாரதி அறக்கட்டளை மற்றும் பேராசிரியர் முகிலை இராசபாண்டியனார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் சி.தியாகராஜன் தலைமை வகித்தார். சுவடிப்புல முதன்மையரும் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் த.கண்ணன் வரவேற்றார். இதில், சரஸ்வதி மஹால் நூலக மற்றும் ஆய்வு மையத்தின் மேனாள் சுவடிக்காப்பாளர் முனைவர் ப.பெருமாள், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பேராசிரியரும் தமிழகத் திருக்கோயில்கள் மற்றும் மடங்களிலுள்ள ஓலைச்சுவடிகள் பராமரிப்பு மற்றும் நூலாக்கத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் ஆகியோர் பேசினர். முனைவர் ப.பெருமாள் பேசுகையில், ‘‘சீனர்கள்தான் காகிதத்தை முதலில் கி.பி.105 இல் கண்டுபிடித்ததாகச் சொல்வதுண்டு. ஆனால், சீனாவில் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்தியாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அதாவது கி.மு.327இல் அலெக்சாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தபோது அவருடைய தளபதிகளில் ஒருவரான ‘நிர்சூஸ்’ (Nearchus) இந்தியாவில் பருத்தியினால் செய்யப்பட்ட தட்டு போன்ற வழவழப்பான பொருட்களில் எழுதப்பட்டது என குறிப்பிட்டு இருக்கிறார்’’ என்றார்.