கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர், குழந்தைவேலு மகன் கோகிலவாசன் (45). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி, அவரது மகன்களான ஜெயபால், ஜெயராஜ், ஜெகதீஷ் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்.15ஆம் தேதி காலை 6 மணி அளவில் ரெங்கசாமி தரப்பினர் வீடு புகுந்து கோகிலவாசனை தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கோகிலவாசன், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோகிலவாசன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் ஜெயபால், ஜெகதீஸ் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 4 ஆவது நுழைவுவாசலில், இறந்து போன கோகிலவாசனின் உறவினர்கள் மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரொங்கசாமி ஜெயராஜ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் கரிகாலன், புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழ. ஆசைத்தம்பி, புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் லட்சாதிபதி, புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், தெற்கு ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல், கணபதிபுரம் கிளை தோழர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் கபிலன், காவல்துறை ஆய்வாளர் பிராங்கிளின், கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.