districts

நீலகண்டப் பிள்ளையார் கோயில் திருவிழா: பத்திரிக்கை அச்சிடாமல் நடத்த முடிவு

தஞ்சாவூர், ஏப்.6 - பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருந் திருவிழா நடத்துதல் தொடர்பாக, திருவிழா பத்திரிக்கை அச்சிடுதலில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு செவ்வாயன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், வருவாய் வட்டாட்சியர் சுகுமார், காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், திருக்கோயில் செயல் அலுவலர் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கோயில் அறங்காவலர்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் மற்றும் சங்கரன் வகையறாக்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “இந்தாண்டு (பசலி 1431) திருவிழாவை பத்திரிக்கை அடிக்காமல் நடத்த வேண்டும். தேர் வரும் பாதைக்கு உரிய பட்டாதாரரிடம் கோவில் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.  திருவிழா பத்திரிக்கை அடிக்கவில்லை என்று நிர்வாக அதிகாரியால் வட்டாட்சியருக்கு எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்திட வேண்டும்.  திருவிழாவில் அனைத்து தரப்பினரும் சட்டம் ஒழுங்கை பராமரித்து முழு ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் நடத்திட வேண்டும்’’ என தீர்மானிக்கப்பட்டது.