தஞ்சாவூர், ஏப்.12 - இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ-25%) தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார வளமையம், வட்டாரக் கல்வி அலுவலகம், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் (சிறுபான்மை பள்ளிகள் தவிர்த்து) ஆகிய இடங்களில் rte.tnschool.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக ஏப்.20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது, குடும்ப அட்டை (குழந்தையின் பெயர் இருக்க வேண்டும்), பிறப்புச் சான்று, பெற்றோர் வருமானச் சான்று, சாதிச்சான்று, பெற்றோர் ஆதார் கார்டு, குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வீடு உள்ளவர்கள், 31.7.2018 முதல் 31.7.2019 வரை உள்ள காலக் கட்டத்தில் பிறந்த குழந்தைகள் இதற்காக விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.