தஞ்சாவூர், மே 11 - திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தஞ்சை மாவட்டம், ஆவணத்தில் உள்ள, பேராவூரணி வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்றார். பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத் தலைவர் கோவி.தாமரைச் செல்வன், செயலாளர் ரா.கண்ணன், மாவட்ட பொறுப்பாளர் கு.நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். திருவிடைமருதூர் திருவிடைமருதூர் வட்டாரக் கல்வி அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் வேணி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் காளிதாசன், ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். நாகப்பட்டினம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி நாகப்பட்டினம் வட்டார கல்வி மையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சித்ரா காந்தி, வட்டார செயலாளர் ந.எழிலரசன், மாவட்ட இணைச் செயலாளர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் துவக்க உரையாற்றினார்.