districts

img

இணையவழி வர்த்தகம்: ஐ.டி. ஊழியரிடம் ரூ. 29.70 லட்சம் மோசடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் இணையவழி வர்த்தகம் எனக் கூறி தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) ஊழியரிடம் ரூ. 29.70 லட்சம் மோசடி செய்த  நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 39 வயது தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியருக்கு, கடந்த ஜூலை மாதம் வாட்ஸ் ஆப் செயலில் இணையவழி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதை நம்பிய ஊழியர் அதிலிருந்த இணைப்பைச் சொடுக்கி உள்ளே சென்றுள்ளார்.
அதன் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்தபோது, அதில் 200 பேர் இருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் இவரை தொடர்பு கொண்டு, இணையவழியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் கூறி வங்கிக் கணக்கை அனுப்பினார். இதை நம்பிய ஊழியர் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பத் தொடங்கினார்.
முதலில் சிறு, சிறு தொகை கிடைத்ததை நம்பிய ஊழியர் பல்வேறு தவணைகளில் ரூ. 29.70 லட்சம் அனுப்பினார். அதன் பிறகு எதிர் முனையில் உள்ள நபர் இவரது கைப்பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதனால் ஏமாற்றமடைந்த ஊழியர் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இணையவழியில் பணத்தை ஏமாந்தவர்கள் உதவிக்கு 1930 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து விவரங்களை கூறி பணத்தை மீட்டு எடுக்கலாம் என அறிவுறுத்துகின்றனர் சைபர் கிரைம் போலீசார்.