districts

பாரபட்சம் இல்லாமல் பயிர்க்கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 25 -  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பேராவூரணி ஒன்றிய பேரவைக் கூட்டம், பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில் வெள்ளிக்கிழமை சி.ஆர்.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.  ஏ.வி.குமாரசாமி வரவேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, வீ.கருப்பையா ஆகியோர் பேசினர். இதில், தலைவராக வே.ஆ.பாலசுந்தர், செயலாளராக சி.ஆர்.சிதம்பரம், பொருளாளராக வேத.கரம்சந்த் காந்தி, துணைத் தலைவராக ராஜாமுகமது, துணைச் செயலாளராக எஸ்.நடராஜன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.  “கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு பாரபட்சமில்லாமல் பயிர்க் கடன் வழங்க வேண்டும். வேளாண் துறை மூலமாக உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும். பிரதமர் கிசான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளின் பெயரை இணைத்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும். கடைமடை பகுதி வாய்க்கால்களை தூர்வாரி, ஏரி குளங்களில் நீர் நிரப்பி தர வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.