தஞ்சாவூர், ஜூலை 10 - சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து, தஞ்சையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பேற்றது முதல், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதேநேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பெண்கள் ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பலமுனை தாக்குதலால் நிலைகுலைந்த நிலையில் உள்ளனர். தற்போது வீட்டு உபயோக எரிவாயு ரூ.50 உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட 1,100 ரூபாயை நெருங்கியுள்ளது. இது நடுத்தர மற்றும் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் வகையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சனிக்கிழமை மாலை தஞ்சை ரயிலடியில், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, அதனைச் சுற்றி வந்து, கும்மி அடித்தும், ஒப்பாரி வைத்தும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி தலைமை வகித்தார். மாதர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.மாலதி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்ட நிர்வாகி டி.வசந்தி மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.