தஞ்சாவூர், ஏப்.1- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மணல் திருடியவர்களை காவல்துறையினர் பிடியிலிருந்து அழைத்துச் சென்ற ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சிற்றம்பலம் காவல் சரகம் ஈச்சன்விடுதி காட்டாற்றில் பகல்நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது, 6 மாட்டு வண்டிகளில் 7 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களில் காவலர்களை பார்த்ததும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 6 மாட்டு வண்டிகளையும், மணல் திருடிய 4 பேரையும், காவல் துறையினர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போது, திருச்சிற்றம்பலம் அருகே ஒரு கும்பல் வழிமறித்து, 4 பேரையும் காவல்துறை பிடியிலிருந்து அழைத்துக் கொண்டு தப்பியோடியது. இதுகுறித்து மணல் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் மற்றும் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக சரவணன் மற்றும் பலர் மீது திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை விசாரணை நடத்தினர். இதில் மணல் திருட்டில் ஈடுபட்ட ராமன், துரை மற்றும் அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்ததாக செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தங்க.ராமஜெயம், வினோத் குமார், ராஜாராம் ஆகிய 5 பேரை கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி, 5 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.