districts

திருச்சி முக்கிய செய்திகள்

தஞ்சாவூர், டிச.5-  தஞ்சாவூர் மாவட்டத்தில், குழந்தைகள் இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்பட்டு வரும் 25 அரசு மற்றும் தனியார் குழந்தைகள் இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பேசியதாவது:  

அனுமதி ஆணை பெற்ற பின்னரே குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளை வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். குழந்தைகளின் வளாகத்தை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் கவனமாக படிக்க, இல்ல கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளை பெற்றோர்கள் வாரத்திற்கு ஒரு முறை வந்து பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லங்களில் சுகாதார சான்று, தீயணைப்புச் சான்று, கட்டிட உறுதிச் சான்று உள்ளிட்ட பதிவுகளை காலாவதி ஆகாமல் புதுப்பிக்க வேண்டும். குழந்தை இல்லத்தில் பணிபுரியும் பணியாளர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்  என்றார்.  இக்கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் குமார், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் தனஞ்செயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளப் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரண உதவி

பாபநாசம், டிச.5- கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவ பாபநாசம் பெனிபிட் பண்ட், பாபநாசம் லயன்ஸ் கிளப், வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் சார்பில் போர்வை, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய ரூ.1,25,000 மதிப்பிலான நிவாரண உதவிப் பொருட்கள் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி ஷங்கரிடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் பலர் பங்கேற்றனர்.

டிராக்டர் திருட்டு: ஒருவர் கைது

பாபநாசம், டிச.5- பாபநாசம் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்த சுதாகர் (44) என்பவரின் ரூ.7 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து சுதாகர் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

இதன் பேரில் பாபநாசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படையமைத்து டிராக்டரைத் திருடிய  மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதி யில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, டிராக்டரை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. தொடர் விசாரணையில் இறங்கிய காவல்துறையயினர், டிராக்டரை திருடியவர்கள் பண்ருட்டிக்கு கொண்டுச் சென்றது தெரிய வந்தது.

 கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா கீழயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(60) டிராக்டரை திருடியது தெரியவந்தது. திருடிய டிராக்டரை பெயிண்ட் அடித்து மாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாபநாசம் போலீசார் டிராக்டரை திருடிய தமிழ்ச் செல்வனை கைது செய்துடன், டிராக்டரைப் பறிமுதல் செய்து, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி அப்துல் கனி தமிழ்ச் செல்வனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேரை பாபநா சம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.