சங்ககிரி அருகே அரசு பள்ளி மாணவன் மீது டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தேவண்ணகவுண்டனூர் கிராமம், வேலமாவலசு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேவியர் மகன் ஆத்மநேசன். இவர் தேவண்ணகவுண்டனூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவனின் உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக தேவண்ணகவுண்டனூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அவரது பாட்டி செல்வநாயகி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கொல்லனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் செல்லும் போது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மாணவன் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த சங்ககிரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.