பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பிரேம்குமார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் விதிமீறல்களை அரசுக்கு தெரிவித்ததன் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடை நீக்கத்தில் உள்ளார். பல்வேறு விதிகள், நீதிமன்ற உத்தரவுகள் இதை தவறு என தெரிவித்தும், துணைவேந்தர் கண்டுகொள்ளாமல் உள்ளார்.
எனவே, அவர் மீண்டும் பணிக்கு திரும்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின ஆசிரியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்கான கோப்புகளை அனுப்பாமல் காலம் கடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை மரியாதை குறைவாக நடத்துபவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியியல் துறைக்கு நிரந்தர பட்டியலின பெண் பேராசிரியை இருக்கும்போது, தற்காலிக ஆசிரியரை துறைத் தலைவராக நியமித்தது கண்டிக்கத்தக்கது.
மேலும், உயிர் வேதியியல் துறையில் கடந்த 2005 ஆம் ஆண்டு உதவி பேராசிரியராக சேர்ந்த பட்டியலினத்தவருக்கு. தற்போது வரை பதவி உயர்வு வழங்காமல் இருப்பதை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க, மற்ற எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத விதிமுறையை பின்பற்ற சொல்வதால், பல மாணவர்கள் தங்களது ஆய்வினை முடிக்காமல் படிப்பை நிறுத்தி வருகின்றனர். இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், சமூக நீதிக்கு புறம்பாகவும் நிரப்பப்பட்ட அனைத்து பணியிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.