டீசல் விலை உயர்வு காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
டீசல் விலை உயர்வின் காரணமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. 15 நாட்களாக கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது ராமேஸ்வரத்தில் ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாயை தொட்ட நிலையில், மீனவர்கள் அதை வாங்கி கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும், பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலை நம்பி மறைமுகமாகவும், நேரடியாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தொடர் வேலை நிறுத்த காரணத்தால் 20 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியாகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.