இராமநாதபுரம், மே 13- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான சந்தனக் கூடு எனும் மத நல்லிணக்க விழா மவ்லீது ஷரீபுடன் தொடங்கியது. புகழ் மாலை பாடல் தொடர்ந்து 23 நாளுக்கு தர்ஹா மண்டபத்தில் தர்ஹா ஹக்தார்கள் மற்றும் மார்க்க அறிஞர்களால் ஓதப்படும்.
மே 19 அன்று சந்தனக்கூடு தைக்காவில் இருந்து பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ண கொடியை யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்ஹா முன்புறம் உள்ள மேடையில் கொடியேற்றமும், முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா மே 31 அன்று மாலை தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஏர்வாடி முஜாவீர் நல்ல இப்ராஹீம் சந்தனக்கூடு வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஜூன் 7-ஆம் தேதி மாலை 5 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்ஹாஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.