புதுச்சேரி,பிப்.24- மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்ட ணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துக் கேட்பு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகத்திற்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் உத்தேச கட்டண பட்டியல் மின் துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ளது. புதுவை மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் 2023-24ஆம் ஆண்டிற் காக வெளியிடப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு குறித்து, இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பிஎம்எஸ்எஸ் அரங்கில் ஆணைய உறுப்பினர் ஜோதி பிரசாத் தலைமையில் வெள்ளியன்று (பிப். 24) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் ஆர்.ராஜாங்கம் பேசுகையில், ஏழை எளிய மக்களை பாதிக்ககூடிய மின்சாரக் கட்டணத்தை உயர்த்தகூடாது. ஏற்கனவே பெரிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கோடிக்காணக்கான ரூபாய் வரி பாக்கிகளை வசூலிக்க வேண்டும். அதுவரை மின் கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது. மேலும் மின்துறையை தனியாருக்கு விற்க அனுமதிக்க மாட்டோம். பிரிப்பெய்டு மின்மீட்டர் பொருத்தும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும என்று வலியுறுத்தினார். தொடர்ந்து இதே கருத்துக்களை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, மின்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு ஆலோசகர் ஜி.ராமசாமி உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர். முன்னதாக மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் பேசுகையில், அரசு துறைகள் ரூ.300 கோடியும், தனியார் நிறுவனங்கள் ரூ.200 கோடியும் வரி பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியதின் பேரில் அவர் இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.