புதுச்சேரி, ஜூலை 22- வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு புதுச்சேரி அரசு பட்ஜெட்டில் உரிய நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து யூனியன் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று, சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பட்ஜெட் அறிவிப்புகளும், அமலாகாத நிலையில் பழைய திட்டங்களின் பெயர்களில் தற்போது புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மின்சார கட்டணச் சலுகை, விவசாயிகளுக்கான மானிய ஊக்கத்தொகை உள்ளிட்ட ஒரு சில பயனுள்ள அறிவிப்புகள் வரவேற்பு பெற்றிருந்தாலும், மக்களின் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண இது உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க, துணைநிலை ஆளுநரின் பட்ஜெட் தள்ளிப்போடும் முடிவை முறியடித்து அரசு எப்படி துணிவாக செயல்பட்டதோ, அதேபோல் மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆளுநரின் எந்தத் தடை வந்தாலும், துணிவுடன் முடிவினை மேற்கொள்ள வேண்டும்.
ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கான உணவுப் பொருட்களை வழங்குவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அரசு கூட்டுறவு நிறுவனங்களை சீரமைத்து லாபகரமாக இயக்குவது உள்ளிட்ட மாநில பொருளாதார நலன் சார்ந்தவைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதுச்சேரி நகரத்தில் வாழும் பெரும்பகுதி முறைசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியத்திற்கு ஒரு சிறு தொகையைக் கூட ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. சுதேசி பாரதி பஞ்சாலைகள் மறுசீரமைப்பு பற்றியும், புதிய வேலை வாய்ப்புகள் பற்றியும் யோசிக்காமல் புதுச்சேரி பொருளாதார மேம்பாடு அடைவது சாத்தியமற்றது என்பதை சுட்டிகாட்டுகிறோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 9,000 கோடி ரூபாய் பட்ஜெட் என்பது புதுச்சேரி மாநில பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் நோக்கில் அமையவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டமும், கார்ப்பரேட்டுகள் பயனடையும் வகையில் அமைந்துள்ளதே தவிர மாநில மக்கள் பயனடையும் வகையில் இல்லை. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு மாநில மக்களின் நலனுக்கான பட்ஜெட்டாக மாற்றம் செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
ஆளுநருக்கு கண்டனம்
துணைநிலை ஆளுநருக்கு உண்டான அதிகார மீறல் எல்லை உச்சத்தை அடைந்துள்ளது. புதுச்சேரி மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க அரசியல் மாச்சரியங்களை கடந்து அனைத்து கட்சிகளும் சமூக இயக்கங்களும் ஒன்றிணைந்து, ஆளுநரின் அடாவடித்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. கொரோனா காலத்தில் சுமார் 100 நாட்கள் ராஜ் நிவாசை விட்டு வெளியே தலை காட்டாத துணைநிலை ஆளுநர், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தன்னலமற்று சேவையாற்றி வரும் சுகாதாரத்துறை மருத்துவர்கள், அதிகாரிகள், ஊழியர்களை கண்ணியமற்ற முறையில் வழி நடத்தியுள்ளது. அவரின் ஆணவத்தையே காட்டுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவுகளை ஆளுநர் கிண்டலடித்துள்ளதின் மூலம், ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்துள்ளார்.
தனக்குள்ள அதிகாரத்தின் மூலமாக மத்திய அரசு மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய நிதி, வளர்ச்சிக்கான திட்டங்களை பெற்று கொடுப்பதற்கு மாறாக, தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகளை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இவை மத்திய பாஜக அரசின் துணையுடன்தான் நடைபெறுகிறது என்ற உண்மை தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இத்தகைய மோசமான ஜனநாயக விரோத மக்கள் விரோத அரசியலை புதுச்சேரி மக்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள். கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் நடவடிக்கையினால் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. எனவே துணைநிலை ஆளுநரை உடனடியாக குடியரசுத்தலைவர் திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.